வேலையில் சேர்ந்த 4 மாதங்களிலேயே திடீரென உயிரிழந்த பெண் | பணிச்சுமை காரணமா?
புனேவில் உள்ள பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் பணிச்சுமையால் உயிரிழந்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பல தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற செய்தனர். அதன்பின், வீட்டில் இருந்து பணியாற்றுவதை வழக்கமாக்கிவிட்டது. பலரும் இரவு நீண்ட நேரம் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், வேலைசுமையால் பல ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த அன்னா செபாஸ்டின் (26) என்ற பெண் கடந்த மார்ச் மாதம் சி.ஏ படித்து முடித்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புனேயில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் முதல் முறையாக வேலைக்குச் சேர்ந்தார். இந்நிலையில், தற்போது அந்த பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து,தனது மகள் பணி அழுத்தம் காரணமாகத்தான் இறந்தார் என்று அன்னாவின் தாயார் அனிதா குற்றம் சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக அன்னாவின் தாயார் அனிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படியுங்கள் :AFGvSA | முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது #Afghanistan
இதில் அவர் தெரிவித்துள்ளதாவது :
"எனது மகள் பள்ளி, கல்லூரியில் நன்றாக படித்தாள். சிஏ தேர்விலும் டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெற்றாள். இதுதான் அவளது முதல் பணி. இதில் ஆர்வத்துடன் பணியை தொடங்கினார். ஓய்வின்றி உழைத்தாள். அவளுக்கு வழங்கப்பட்ட பணிகளை செய்து முடித்தாள். நீண்ட நேரம் பணியாற்றியது அவளுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை கொடுத்தது.
மார்ச் மாதம் பணியில் சேர்ந்தவள், ஜூலை மாதம் உயிரிழந்தாள்.குறிப்பாக ஷிப்ட் நேரம் முடியும்போது அவரது மேலாளர் சில பணிகளை கொடுத்து வந்தார். அதனால் ஓவர் டைமாக பணியாற்ற வேண்டிய நிலை. வார விடுமுறை நாட்களிலும் பணியாற்ற வேண்டி இருந்தது.நாங்கள் வேலையை விடுமாறு தெரிவித்தோம். ஆனால், கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவளை தடுத்துவிட்டது.
இப்போது அவளே இல்லை. அவளது இறுதிச் சடங்குக்கு அவள் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை. எனது மகளைப் போல இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாரும் உயிரிழக்கக் கூடாது என்பதற்காக தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். எங்களைப் போன்ற எந்தவொரு ஊழியரின் குடும்பமும் பாதிக்கப்படக் கூடாது”
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.