ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்காக பிரியாணி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட தந்தை | உதவிக்கரம் நீட்டிய #YouTuber இர்ஃபான்!
கோவையில் பிரியாணி சாப்பிடும் போட்டியில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது மகனின் மருத்துவ செலவிற்காக பணம் சேர்க்க கணேச மூர்த்தி என்ற நபருக்கு பிரபல யூடியூபர் இர்ஃபான் உதவியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸில் கடந்த வாரம் புதன்கிழமை அன்று பிரியாணி போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அரை மணி நேரத்திற்குள் 6 பிரியாணி சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசும் , 5 பிரியாணி சாப்பிட்டால் ரூ.50,000 பரிசு, 3 பிரியாணி சாப்பிட்டால் ரூ.25,000 பரிசும் என அதிரடியாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
இதற்காக இந்த போட்டியில் பங்கேற்பதற்காக கோவை மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். இந்த போட்டியில் குழந்தையின் மருத்துவ செலவிற்காக போட்டியில் ஓட்டுநர் ஒருவரும் பங்கேற்றார்.
ஆனால் இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 6 பிளேட் பிரியாணியை யாரும் சாப்பிடவில்லை. போட்டியில் அதிகமாக உட்கொண்டவர்கள் அனைவரும் வரிசைபடுத்தி பிரியாணி வெற்றியாளர்கள் அறிவித்தனர். இதில் 1) சதீஸ் (3 பிளேட்) - 1 லட்சம் பரிசு பெற்றார். இவர் கூலித்தொழிலாளியாக உள்ளார். இதனைத்தொடர்ந்து கணேச மூர்த்தி (2 மற்றும் அரை பிளேட்) - 50 ஆயிரம் பரிசு பெற்றார். இவர் வாடகை கார் ஓட்டுநராக உள்ளார். இவர் ஆட்டிசமால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்காக உணவு போட்டியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக கிரண் (2 மற்றும் கால் பிளேட்) 25 ஆயிரம் பரிசு பெற்றார், இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.
இந்நிலையில் தனது குழந்தையின் மருத்துவ செலவுக்காக கணேசமூர்த்தி என்பவர் கலந்து கொண்டது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இந்நிலையில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைக்காக பிரியாணி போட்டியில் கலந்து கொண்ட நபருக்கு யூடியூபர் இர்பான் உதவி செய்து உள்ளார். சமூக வலைதளத்தில் மூலம் யூ டியுபர் இர்பான் சுமார் ரூ.1,05,000 குழந்தையின் மருத்துவ செலவுக்காக அளித்துள்ளார்.