‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ படத்திற்கு குரல் கொடுத்த அப்பா - மகன்!
உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட் படமான கராத்தே கிட், 1984 முதல் பல பாகங்களாக வந்துள்ளது. அதில் முக்கியமானது ஜாக்கிசான், ஜேடன் ஸ்மித் நடிக்க 2010ல் வெளியான ‘தி கராத்தே கிட்’. அந்த படத்தின் கதையும், ஜாக்கிசான், ஜேடன் நடிப்பும் கோடிக்கணக்கான ரசிகர்களை சென்றடைந்தது. இந்நிலையில் இதன் அடுத்த பாகமான ‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ மே 30ல் வெளியாக உள்ளது.
இந்தியாவிலும் ஹாலிவுட் படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பதால், இந்த படம் ஆங்கிலத்தில் மட்டுமல்ல, இந்தி, தெலுங்கு, தமிழிலும் அதே தேதியில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்திற்கு அஜய் தேவ்கன் மற்றும் அவரது யுக் தேவ்கன் இணைந்து குரல் கொடுத்துள்ளனர். சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்த 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' இந்தி பதிப்பில், ஜாக்கி சான் நடித்த ஐகானிக் கேரக்டரான மிஸ்டர் ஹான் எனும் கதாபாத்திரத்துக்கு அஜய் தேவ்கன் குரல் கொடுத்துள்ளார்.
அவரது மகன் யுக் தேவ்கன் பென் வாங் நடித்த லி ஃபாங் எனும் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்துள்ளார். அஜய்தேவ்கன் இந்த டப்பிங் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகம் ஆகிறார். மும்பையில் நடைபெற்ற ஒரு பிரமாண்ட நிகழ்வில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் அவரது மகன் யுக் தேவ்கன் இணைந்து ‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர். இந்த படத்தின் மூலம் இருவரும் முதன்முறையாக ஒரு சர்வதேச திரைப்படத்துக்காக இணைந்து பணியாற்றியுள்ளனர்.
குரு மற்றும் சீடன் இடையிலான உறவை மையமாகக் கொண்டதே கராத்தே கிட் லெஜண்ட்ஸ் படத்தின் கதை. இந்த கதைக்கு அப்பா, மகன் டப்பிங் பேசியுள்ளது உணர்வுபூர்மாக பார்க்கப்படுகிறது. நியூயார்க் நகரத்தை மையமாகக் கொண்ட இந்த படம், புதிதாக பள்ளியில் சேரும் குங் ஃபூ மாணவன் பென்வாங் தனது புதிய சூழலுக்கு ஏற்றபடி எவ்வாறு இணைகிறார், அங்கு ஏற்படும் எதிர்பாராத நட்புகள், ஒரு உள்ளூர் கராத் தே சாம்பியனுடன் சந்திக்க வேண்டிய கடுமையான சவால்கள் ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை சுவாரஸ்யமாக பதிவு செய்கிறது. அவரது ஆசிரியரான ஜாக்கிசான் வழிகாட்டுதல், அன்பால் அந்த கிட் எப்படி மாறுகிறான் என்று பேசுகிறது.