கத்தரிக்காய் கிலோ ரூ.8-க்கு விற்பனை...உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை...
ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக
கத்தரிக்காய் நல்ல விளைச்சல் கண்டும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள்
வேதனை அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தலைவாசல்,
வீரகனூர், சிறுவாச்சூர், ஊனத்தூர், கருமந்துறை, தம்மம்பட்டி, கெங்கவல்லி
உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர்களில் கத்தரிக்காய்
சாகுபடி செய்துள்ளனர். இங்கு அறுவடை செய்யப்படும் கத்தரிக்காய் உள்ளூர்
சந்தைகளுக்கு மட்டுமின்றி தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கும்
விற்பனைக்காக கொண்டு செல்வது வழக்கம்.
இதனிடையே வடகிழக்கு பருவ மழை தொடங்கியதையடுத்து கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழைக் காரணமாக கத்தரிக்காய் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனால் தலைவாசல் தினசரி காய்கறி சந்தை மற்றும் உழவர் சந்தைக்கு கத்தரிக்காய் வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையாக கத்தரிக்காய் தற்போது விலை வீழ்ச்சி அடைந்து ஒரு
கிலோ மொத்த விலையில் 8 ரூபாய்க்கும் சில்லறை விலையில் 15 ரூபாய்க்கும்
விற்பனையானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்,
கத்தரிக்காயை அறுவடை செய்து சந்தைக்கு எடுத்து செல்லும் போது உரிய விலை
கிடைக்காமல் வியாபாரிகள் சொல்லும் விலைக்கே விற்பனை செய்து வருவதால்,
வியாபாரிகள் நல்ல லாபத்தை ஈட்டி வருகின்றனர். ஆனால் ஏக்கர் ஒன்றுக்கு 40
ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் அதற்கு உண்டான வருவாய் கிடைக்காமல் பெரும்
நஷ்டத்தை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.