அஜித்தின் அறிவிப்பால் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
அக்டோபர் மாதம் எந்த படத்திலும் நடிக்கப்போவதில்லை என நடிகர் அஜித்குமார் அறிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கைவசம் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள் உள்ளன. இதில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.
அதேபோல் குட் பேட் அக்லி படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நடிகர் அஜித் கார், பைக் ரேஸ் ஓட்டுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடிகர் அஜித்குமார் பைக் அல்லது கார் ரைடு சென்று விடுவார்.
சமீபத்தில் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி அஜித், தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி கார் ரேஸிங்கில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற அஜித்குமார் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், வரும் அக்டோபர் மாதம் வரை சினிமாவில் நடிக்கப் போவது இல்லை என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் அஜித் கூறியதாவது,
"18 வயதில் ரேசிங் தொடங்கினேன். அதன்பின் சினிமாவில் நடித்து வந்ததால் ரேசில் பங்கேற்கவில்லை. 2010 ஆம் ஆண்டு European-2 இல் களமிறங்கினேன். பின்னர் போட்டிகளில் பங்கேற்க இயலவில்லை. கார் பந்தய தொடர் முடிவடையும் வரை அடுத்த 9 மாதங்களுக்கு (அக்டோபர் வரை) எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்" என்று தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின் இந்த அறிவிப்பால் அவரின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.