Pushpa 2 படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது ரசிகர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை!
புஷ்பா திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோதே ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி, சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தல் காரனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படத்தில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார். இப்படம் இந்திய அளவில் ஹிட் அடித்தது.
மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியது. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸானது. இப்படம் 3 மணிநேரம் 21 நிமிடம் ஓடக்கூடிய அளவு மிகப்பெரிய ரன்னிங் டைம் கொண்டுள்ளது.
அதில் முதல் பாதி 1 மணிநேரம் 40 நிமிடமும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 41 நிமிடமும் ஓடும் என கூறப்பட்டது. இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தின் வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 'புஷ்பா 2' திரைப்படம் வெளியான 5நாட்களில் உலகளவில் ரூ.922 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய சினிமா வரலாற்றில் 1000 ரூபாய் வசூலை நெருங்கும் திரைப்படம் எனும் சாதனையை புஷ்பா 2 திரைப்படம் படைத்துள்ளது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள திரையரங்கில் புஷ்பா-2 படம் பார்த்துக் கொண்டிருந்தபோதே உடல் நலக் குறைவு ஏற்பட்டு ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்கில் ரசிகர் ஒருவர் உயிரிழந்ததை அறிந்தபோதும் கூட படத்தை நிறுத்தாமல் இருந்துள்ளனர். இதனையடுத்து திரையரங்கு ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், திரையிடலை நிறுத்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் ரசிகர் காட்சியை பார்க்க சென்ற பெண் ஒருவர் திரையரங்கிற்கு வந்த அல்லு அர்ஜூனை பார்க்க வந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவமே இன்னும் மறையாத சூழலில் அதற்குள் இன்னொரு இறப்பா என ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.