தன் பிறந்த நாளில் உயிரை மாய்த்துக் கொண்ட பிரபல மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன்!
ஏராளமான திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்த பிரபல நடிகை ரெஞ்சுஷா மேனன், தனது பிறந்தநாளன்று தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகை ரெஞ்சுஷா மேனன் கொச்சியை பூர்விகமாகக் கொண்டவர். இவர் தொழில்முறை பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி இவர், அதன்பின் 'ஸ்த்ரீ' சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மம்மூட்டியின் 'ஒன் வே டிக்கெட்', 'பாம்பே மார்ச்', திலீப்பின் 'மேரிக்குண்டொரு குஞ்சாடு', 'கார்யஸ்தான்', லிஜோ ஜோஸ் பல்லிசேரியின் 'சிட்டி ஆஃப் காட்' ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்து பிரபலமானார்.
இவர் தனது கணவரும், நடிகருமான மனோஜ் உடன் திருவனந்தபுரத்தில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களாக ரெஞ்சுஷா மேனன் கடன் பிரச்னையில் இருந்ததாக சொல்லப்படுகின்றன. எனினும், இது உயிரை மாய்த்து கொண்டதற்கான காரணமா என்பது போலீஸ் தரப்பில் விளக்கப்படவில்லை. அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீஸார், இது தொடர்பாக வழக்குப் பதிந்துள்ளனர்.
நடிகை ரெஞ்சுஷா மேனன், கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருப்பதுபோல சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்ததை ரசிகர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். நேற்று ரெஞ்சுஷாவுக்கு பிறந்தநாள். பிறந்தநாளை கொண்டாட வேண்டிய அவர் மரணம் அடைந்துள்ளது மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் மற்றொரு மலையாள நடிகை அபர்ணா நாயர் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம் மறைவதற்குள் ரெஞ்சுஷா மேனன் செய்தி வெளிவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.