Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால் குடும்ப அட்டையில் பெயர் நீக்கமா? - தமிழ்நாடு அரசு விளக்கம்...!

10:10 PM Feb 07, 2024 IST | Web Editor
Advertisement

நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பு தொடர்பாக சில நாளிதழ்களில் வெளியான செய்தி குறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் 2.20 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன.  இதில், முன்னுரிமை குடும்ப அட்டைகள்,  முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் என வெவ்வேறு பிரிவுகளில் அட்டைதாரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.  நியாயவிலைக் கடைப் பொருள்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேருவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் கருவிகள் பயன்பாட்டில் உள்ளன.

குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று விரல்ரேகையைப் பதிவிட்டு பொருள்கள் வாங்கும் நடைமுறை அமலில் உள்ளது.  நேரில் வந்து விரல்ரேகையைப் பதிவிட்டு பொருள்களைப் பெற முடியாதவர்கள்,  அதற்கான உரிய படிவத்தில் சான்று அளித்து வேறொரு நபர் மூலம் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு மாற்றுத் திறனாளிகள்,  வயது முதிர்ந்தோர்களுக்கு  மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் ; “சென்னை சேப்பாக்கத்தில் ரஞ்சி கோப்பை போட்டியை இலவசமாக பார்க்கலாம்!” – தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு…!

இந்நிலையில், பிப். 06 மற்றும் 07 ஆம் தேதிகளில் சில நாளேடுகளில், நியாய விலைக் கடைகளில் இன்றியமையாப் பண்டங்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சுயவிவரங்களை ஒரு வெள்ளைத்தாளில் அளிப்பதுடன் விரல் ரேகை சரிபார்ப்பை இம்மாத (பிப்ரவரி) இறுதிக்குள் மேற்கொள்ள வேண்டுமென்றும், அவ்வாறு மேற்கொள்ளாதவர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்படும் என்று செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் எனவும் செய்திகள் வெளியானது.

இது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் தெரிவித்துள்ளதாவது;

"தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன் படி, பொதுவிநியோகத் திட்ட தரவுகளில் ஏற்கனவே பதியப்பட்ட முன்னுரிமை மற்றும் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதன்படி, குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறின்றி இப்பணியினைச் செய்திட அறிவுறுத்தப்பட்டு பொதுமக்கள் ஓய்வாக இருக்கும் போதோ அல்லது பொருள்கள் வாங்க கடைக்கு வரும்போதோ கைவிரல் ரேகைப் பதிவு மூலம் புதுப்பிக்கக் கூறப்பட்டு அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகை சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை 63% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மீதியுள்ள அட்டைதாரர்களுக்கும் சரிபார்க்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது. குடும்ப அட்டைதாரர்கள் அவரவர்கள் வசதிக்கேற்ப விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இயலவில்லையெனில், இதற்கென தனி முகாம்கள் நடத்தவும், தேவைப்படின் வீட்டிற்கே சென்று புதுப்பித்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சில நாளிதழ்களில் குறிப்பிட்டிருப்பது போல் குடும்ப அட்டைகள் ஏதும் ரத்து செய்யப்படாது என்றும், கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்களும் நீக்கப்படாது என்றும், வெள்ளைத்தாளில் சுய விவரங்கள் ஏதும் தரவேண்டியதுமில்லை என்பதால், இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை"

இவ்வாறு தமிழ்நாடு அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

Tags :
biometric deviceFamilycardfingerprintnameRationShopRationshopworkersTamilNaduTNGovt
Advertisement
Next Article