ஜன. 4 முதல் சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே ஜனவரி 4-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை தோறும் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – கோவை ஆகிய 2 வழித்தடங்கள் என நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே 25-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிட்ட செய்தி ;
"சென்னை எழும்பூர் திருநெல்வேலி இடையே தற்போது சிறப்பு வந்தே பாரத் ரயில் (எண்: 06067 06068) இயக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ரயிலை நாகர்கோவில் வரை நீடிக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையும் படியுங்கள் : பாக்ஸிங் டே டெஸ்ட் – தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்துமா இந்திய அணி?
அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன. 4 முதல் இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 4 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை எழும்பூரிலிருந்து வியாழக்கிழமை தோறும் காலை 5.15 மணிக்கு புறப்படும் ரயில் பிற்பகல் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடைய உள்ளது. மேலும், நாகர்கோவிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.