தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் குண்டுவெடிப்பு... பாகிஸ்தானில் பதற்றம்!
பாகிஸ்தானில் பிப்.8-ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கராச்சி மாநகரிலுள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தின் கார் பார்க்கிங் பகுதியில் இன்று (பிப்.3) குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
பாகிஸ்தானில் பிப்.8-ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் டிச.20-ம் தேதி தொடங்கியது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என், இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக்-இ-இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், பாகிஸ்தானின் கராச்சி மாநகரிலுள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தின் கார் பார்க்கிங் பகுதியில் இன்று (பிப்.3) குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. தேர்தல் ஆணைய அலுவலகத்தினுள் அடையாளம் தெரியாத நபர்கள் நெகிழிப்பை ஒன்றில் வெடிகுண்டை மறைத்து வைத்துவிட்டுச் சென்றிருந்தனர்.
இதையும் படியுங்கள்: பிரதமர் மோடி மீது சர்ச்சைகள் இருந்தாலும் அவர் எழுச்சியூட்டும் தலைவர் – ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் புகழாரம்!
தூய்மைப்பணியாளர் ஒருவர் அந்த நெகிழிப்பையை எடுத்து குப்பையில் வீசியுள்ளார். இதனைத் தொடர்ந்து குப்பையில் கிடந்த வெடிகுண்டு இன்று (பிப்.3) காலை திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த குண்டுவெடிப்பு தேர்தல் ஆணைய அலுவலகத்தினுள் நிகழ்திருந்தால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.