இந்தியா - பாகிஸ்தான் இடையே சிறை கைதிகளின் பட்டியல் பரிமாற்றம்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் தூதரகங்களின் மூலம் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களின் பட்டியல் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 21-5-2008 அன்று செய்துகொண்ட தூதரக அணுகுமுறை ஒப்பந்தத்தின் விதிகளின்படி, ஆண்டுதோறும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தங்கள் நாட்டு சிறைகளில் அடைத்து வைக்கபட்டுள்ள கைதிகளின் பட்டியலை பரிமாறிக்கொள்ள வேண்டும் .
அந்த வகையில், பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 254 இந்திய கைதிகளின் பட்டியலை இந்திய தூதரகத்திடம் இன்று அளிக்கப்பட்டது. இவர்களில் 43 பொதுமக்கள் மற்றும் 211 மீனவர்கள் ஆவர்.அதேபோல் இந்திய சிறைகளில் உள்ள 452 பாகிஸ்தான் கைதிகளின் பட்டியலை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் இந்திய அரசு அளித்தது. இவர்களில் 366 பேர் பொதுமக்கள் மற்றும் 86 மீனவர்கள் ஆவர்.
இதையும் படியுங்கள் : திரிணாமுல் காங். எம்பி சாகேத் கோகலே ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு – டெல்லி உயர் நீதிமன்றம்!
இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது :
”பாகிஸ்தான் காவலில் உள்ள 186 மீனவர்கள் மற்றும் பொதுமக்களை விடுவிக்கும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மேலும், இந்தியர்கள் என்று நம்பப்படும் 47 கைதிகளுக்கு தூதரக அனுகல் அனுமதி வழங்குமாறும் பாகிஸ்தான் அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இரு நாட்டுக் கைதிகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணும் விஷயத்தில் இந்தியா உறுதியாக உள்ளது. பாகிஸ்தான் நாட்டுக் கைதிகள் என்று நம்பப்படும் 75 கைதிகளின் குடியுரிமை உறுதி செய்யப்படாததால், அவற்றை சரிபார்க்கும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்”
இவ்வாறு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2014 முதல் 2639 இந்திய மீனவர்களும், 71 பொதுமக்களும் பாகிஸ்தானில் இருந்து இந்தியவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கடந்தாண்டு மட்டும் 478 மீனவர்களும், 13 பொதுமக்களும் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.