Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு வேதனை அளிக்கிறது" - முதலமைச்சர் #MKStalin இரங்கல்!

01:06 PM Dec 14, 2024 IST | Web Editor
Advertisement

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த நவ.27ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வந்தனர்.

சென்னை மியாட் மருத்துவமனையில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,

“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். தந்தை பெரியார், ஈ.வி.கே. சம்பத் என மிகப்பெரும் அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர் என பல்வேறு நிலைகளில் பொதுவாழ்க்கைப் பணிகளைத் திறம்பட ஆற்றியவர்.

எப்போதும் தன் மனதில் பட்டதைப் பேசிவிடக் கூடிய பண்புக்குச் சொந்தக்காரர். அவரது அன்பு மகனும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான ஈ.வெ.ரா-வை இழந்ததில் இருந்தே இளங்கோவனின் மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்தார். எனினும், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று, தன் கவலைகளை மீறி மக்கள் பணியாற்றி வந்தார். என்னை எப்போது சந்திக்க வந்தாலும், "உடம்ப பாத்துக்கோங்க" என்று அவர் அக்கறையுடன் சொல்லத் தவறியதே இல்லை. அவ்வாறு அவர் அன்பொழுகச் சொல்லும்போதெல்லாம் "நீங்க உங்க உடம்ப பாத்துக்கோங்க" என நானும் அவரிடம் சொல்வேன்.

அதற்கு அவர், "நீங்கள் என்னிடம் ஒப்படைத்த மக்கள் பணியை ஏற்ற பிறகு இன்னும் சுறுசுறுப்புடன் பணியாற்றுகிறேன். நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன். நலமாக இருக்கிறேன்" என்று உற்சாகம் ததும்பக் கூறி என்னைச் சமாதானப்படுத்துவார். சட்டமன்றத்தில் சந்திக்கும்போதும், நமது திமுக அரசின் திட்டங்களைக் குறிப்பிட்டு அவற்றுக்கு மக்களிடையே உள்ள ஆதரவையும் என்னிடம் தெரிவித்துப் பாராட்டுவார்.

அவர் உடல்நலம் குன்றி மருத்துவமனைக்குப் போகும் நிலையிலும் தனது துணைவியாரிடம், என்னைச் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார். அதை அறிந்து அவரை நான் சந்தித்தபோது, அவர் பேசும் நிலையில் இல்லை. இருந்தபோதும் அவர் என்னிடம் என்ன சொல்ல நினைத்தார் என்பதை உணர்ந்தவனாகவே நான் இருந்தேன். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், அவரது மகனையும், மருத்துவர்களையும் தொடர்புகொண்டு, அவரது உடல்நலன் குறித்த தகவல்களை அவ்வப்போது அறிந்து வந்தேன்.

இந்த நிலையில், இன்று காலை அவரது உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்ட செய்தியும் அதனைத் தொடர்ந்து அவர் மறைவுற்றார் என்ற செய்தியும் வந்தடைந்தது. அவரது மறைவு அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது. பல ஆண்டுகள் தமிழ்நாடு அரசியலில் முன்னணித் தலைவராக விளங்கி, நீண்டகாலம் மக்கள் பணியாற்றிய அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article