Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இந்திய அணியில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கின்றன” - இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி!

09:57 PM Aug 23, 2024 IST | Web Editor
Advertisement

விளையாட்டுத் துறையில் பெண்கள் பலர் சாதிப்பதாகவும், இந்திய அணியில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதாகவும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் கூறியுள்ளார்.

Advertisement

விருதுநகர் மாவட்டத்தில் 100-வது ‘காபி- வித் கலெக்டர்’ நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (ஆக. 23) காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 150 மாணவ - மாணவியர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் பேசுகையில்,

“விளையாட்டு மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் கிராமப்புற இளைஞர்கள் சாதித்து வருகின்றனர். விருப்பத்தோடும், கடின உழைப்போடும் இலக்கை நோக்கி முயற்சித்தால் சாதனை படைக்க முடியும். நான் மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவன். விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். ஆனால், தன் அம்மா கொடுக்கும் உணவுதான் தனக்கு சத்தான உணவு. கூச்சம் தான் நம்மை தடுக்கிறது. கூச்சத்தை விட்டுவிட்டால் எந்த இடத்திலும் சாதிக்க முடியும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து நடராஜன் அளித்த பேட்டியில், “விளையாட்டுத் துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் இளைஞர்களுக்கு இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள். பிள்ளைகளின் விளையாட்டுக்காக தங்களது நேரத்தை செலவிடுகிறார்கள். விளையாட்டுத் துறையில் இன்று பெண்கள் பலர் சாதிக்கிறார்கள். இந்திய அணியில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கிறது. காயம் ஏற்பட்டதன் காரணமாகவே இந்திய அணியில் சரியாக இடம் கிடைக்கவில்லை.

விளையாட்டுத் துறை சிறப்பாகவும் வேகமாகவும் முன்னேறி வருகிறது. ஒரு காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியாத நிலையில் இருந்து, தற்போது ஏராளமான பதக்கங்களை இந்திய வீரர்கள் பெற்று வருகிறார்கள். எந்தத் துறையாக இருந்தாலும் முயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி பெற முடியும். இந்திய கிரிக்கெட் அணியில் எல்லோருக்கும் வாய்ப்பு உள்ளது” என்று நடராஜன் கூறினார்.

Tags :
cricketerindian cricketNatarajanNews7Tamilnews7TamilUpdatesOpportunityTeam IndiaVirudhunagar
Advertisement
Next Article