"50 ஆண்டுகள் இருக்கும் கட்சிகள் கூட விஜயை பார்த்து பயப்படுகிறார்கள்" - கிருஷ்ணசாமி!
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "கிராமப் பகுதிகளில் குடிநீர், சாலை, சுகாதார வளாகம் இல்லாததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கிராமப்புற மக்களுக்கு குடிநீர் வழங்காத அரசு, 505 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறது. 100 நாள் வேலை திட்டத்தின் முறைகேடுகளை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். தமிழக அரசின் எந்த திட்டங்களும் கிராமப் பகுதிகளை சென்றடையவில்லை. வரும் தேர்தலில் திமுகவின் கூட்டணி பாச்சா பலிக்காது.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் மலரும். புதிய தமிழகம் கட்சியின் கூட்டணி குறித்து ஜனவரிக்குப் பிறகு அறிவிக்கப்படும். 75 ஆண்டுகள், 50 ஆண்டுகள் இருக்கும் கட்சிகள் கூட நடிகர் விஜயை பார்த்து பயப்படுவது போல் தெரிகிறது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். வரும் தேர்தலில் பெண்களிடையே டாஸ்மாக்கிற்கு எதிரான புரட்சி உருவாகும். 2026 தேர்தலில் எந்த கூட்டணியில் இருந்தாலும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும்" என்று தெரிவித்துள்ளார்.