"நான் நடிக்காமலிருந்தாலும் இப்படத்தை வியந்து பார்த்திருப்பேன்" - 'எக்ஸ்டிரீம்' Audio Launch-ல் நடிகை ரக்ஷிதா பேச்சு
நான் நடிக்காமலிருந்தாலும் இந்தப்படத்தை வியந்து பார்த்திருப்பேன் என 'எக்ஸ்டிரீம்' பட இசை வெளியீட்டு விழாவில் நடிகை ரக்ஷிதா மஹாலட்சுமி தெரிவித்துள்ளார்.
சீகர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் 'எக்ஸ்டிரீம்'. ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் சஸ்பென்ஸ் திரில்லராக பாணியில் உருவாக உள்ளது. இந்த படம் டிச.20 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினரும், திரைப்பிரபலங்களும் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில், நடிகை ரக்ஷிதா மஹாலட்சுமி மேடையில் பேசியதாவது,
"பிக்பாஸ் முடிந்து வந்தபிறகு இயக்குநர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டார். முதலில் அவருக்கு என்னை யாரென்று தெரியவில்லை. எனக்கு லுக் டெஸ்ட் எல்லாம் வைத்தார். அவருக்கு என்ன வேண்டும் என்பதில், மிகத் தெளிவாக இருந்தார். அவருக்கடுத்து சிவம் மிகக் கடினமாக உழைத்துள்ளார். இந்தப்படத்தில் மியூசிக் மிக அற்புதமாக வந்துள்ளது. டிரெய்லர் பார்த்த எல்லோரும் பாராட்டினார்கள். நான் நடிக்காமலிருந்தாலும் இந்தப்படத்தை வியந்து பார்த்திருப்பேன். அந்தளவு நல்ல கதையம்சம் உள்ள படம். எல்லோரும் எவ்வளவு கடுமையாக இப்படத்திற்காக உழைத்துள்ளனர் என அருகிலிருந்து பார்த்துள்ளேன். படம் மிக அருமையாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி"
இவ்வாறு நடிகை ரக்ஷிதா மஹாலட்சுமி தெரிவித்துள்ளார்.