ஸ்ரீபெரும்புதூரில் ESI மருத்துவமனை | மக்களவையில் எம்.பி டி.ஆர்.பாலுவின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!
ஸ்ரீபெரும்புதூரில் 100 படுக்கை வசதிகளுடன் புதிய ஈஎஸ்ஐ மருத்துவமனையை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நேற்று (25.11.2024) தொடங்கியது. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் நாடாளுமன்ற மக்களவை திமுக குழுவின் தலைவருமான டி.ஆர்.பாலு, எம்.பி. மக்களவைக் கூட்டத்தொடரின் முதல் நாளே ஸ்ரீபெரும்புதூரில் மத்திய அரசின் தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.ஐ) மருத்துவமனை அமைப்பது தொடர்பான கேள்வியை எழுப்பினார்.
இது தொடர்பாக அவர் முன்வைத்த கேள்விகளாவது:
" சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, படப்பை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான கனரக, நடுத்தர மற்றும் சிறு-குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தினருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை வசதிகள் உரிய முறையில் பெற வேண்டியதைக் கருத்தில் கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் மருத்துவமனையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதா? அப்படி என்றால் அதன் முழு விவரங்கள் என்ன? மருத்துவமனை அமைத்திடும் திட்டம் ஏதும் இல்லை என்றால் அதற்கான காரணம் என்ன? மருத்துவமனை வசதிகள் அமைப்பதில் தாமதமாவதற்கு என்ன காரணம்?"
இவ்வாறு பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தார்.
இந்தக் கேள்விக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஷோபா கராந்த்லாஜே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதன் விவரம் பின்வருமாறு:
“ஸ்ரீபெரும்புதூரில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையை உடனடியாக அமைக்க இ.எஸ்.ஐ. நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 178 கோடி ரூபாயில் மருத்துவமனை வசதிகள் உருவாக்கப்படும். இது தொடர்பாக உரிய நிதி அனுமதி இ.எஸ்.ஐ. நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது. மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் மத்திய பொதுப்பணித் துறையின் பொறுப்பில் விடப்பட்டு அதற்கான ஆணையும் தரப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும்"
இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள் : அதிரடியாக சரிந்த தங்கம் விலை | இன்றைய நிலவரம் என்ன?
ஸ்ரீபெரும்புதூரில் பகுதியில் உள்ள பல்வேறு ஆலைகளிலும் தொழில் நிறுவனங்களிலும் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் உரிய மருத்துவம் மற்றும் சிகிச்சை வசதிகள் பெற வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்து மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை ஸ்ரீபெரும்புதூரில் அமைக்க மத்திய அரசும், தொழிலாளர் காப்பீட்டு நிறுவனமும் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.