தீவிரமடையும் போர் பதற்றம் – பாகிஸ்தான் நிலைபாட்டுக்கு துருக்கி ஆதரவு!
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. இது இரு நாடுகளுக்கிடையேயான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
முன்னதாக பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச அளவிலான நடுநிலை விசாரணை தேவை என பாகிஸ்தான் தெரிவித்தது. இருப்பினும் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டியது. இதனிடையே அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா போன்ற நாடுகள் பயங்கர வாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது. இதனிடையே சீனா மத்தியஸ்தம் செய்ய விருப்பம் தெரிவித்தது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள இந்த சூழலில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் கோரி வரும் சர்வதேச விசாரணைக்கு துருக்கி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து துருக்கி பிரதமர் ரசிப் தைய்யிப் எர்டோகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதற்றம், ஏவுகணைத் தாக்குதல்களால் பல பொதுமக்கள் உயிரிழக்க நேரிடும். அதனால் மோதல் மேலும் அதிகரிக்கும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம். தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.
நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்புடன் ஒரு முக்கியமான தொலைபேசி உரையாடலை நடத்தினேன். ஜம்மு காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற பாகிஸ்தானின் முன்மொழிவை மதிப்புமிக்கதாக பார்க்கிறேன்.
நெருப்பில் பெட்ரோல் ஊற்றுபவர்கள் இருந்தாலும், நிலைமை மோசமாவதற்கு முன்பு, பதற்றங்களைக் குறைப்பதற்கும், பேச்சுவார்த்தைக்கான வழிகளைத் திறப்பதற்கும் துருக்கியர்களாகிய நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்”
இவ்வாறு துருக்கி பிரதமர் ரசிப் தைய்யிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.