ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. திமுக மற்றும் நாதக கட்சிகள் வேட்பாளர் அறிவித்து போட்டியிடுவதாக அறிவித்தனர்.
53- வாக்குப்பதிவு மையத்தில் உள்ள 237- வாக்குச்சாவடியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கிய நிலையில், இன்று (ஜன.17) நிறைவுபெற உள்ளது. இந்த சூழலில் காலை 10 மணியளவில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் தற்போது திமுக வேட்பாளர் வி.சி.சந்திரக்குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதன்படி வி.சி.சந்திரக்குமார் இந்தியா கூட்டணி கட்சியினரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புனு தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு பிற்பகல் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.