ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - பிரசாரம் நிறைவு!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதையடுத்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் நாளை மறுநாள்(பிப்.5) நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அத்தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. இடைத்தேர்தலில் 2.27 லட்சம் பேர் வாக்களிக்க உள்ள நிலையில், 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் சேர்த்து மொத்தமாக 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இருப்பினும் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக போன்ற முக்கிய கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில், தேர்தல் இருமுனை போட்டியாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாலையுடன் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு பெற்றது. திமுக மற்றும் நாதக தேர்தலையொட்டி கடந்த இரண்டு வாரங்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு பெற்றது.