ஆதவ் அர்ஜுனா வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை!
விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா வீட்டில், இரண்டாவது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தின் லாட்டரி சீட்டுகளை போலியாக அச்சடித்து விற்பனை செய்ததாகவும், இதன் மூலம் வருமானத்திற்கு அதிகமாக பணம் ஈட்டியதாகவும், கோவையின் மார்ட்டின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து அவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு சொந்தமான வீடுகள், கெஸ்ட் ஹவுஸ், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் கடந்த 2019ல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதில் ரூ.910 கோடி அளவுக்கு அவர் அளவுக்கு அதிகமான வருமானம் ஈட்டியதாகவும், இதை கொண்டு 40 நிறுவனங்களில் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தினர். அடுத்தடுத்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில் ரூ.451.7 கோடி அளவுக்கு சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்த சோதனைகள் கடந்த ஆண்டும் நடந்தது.
இந்நிலையில் நேற்று திடீரென கோவையின் வெள்ளக்கிணறு, மேட்டுப்பாளையம் சாலை பகுதிகளில் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில், துணை ராணுவப்படையின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதேபோல் சென்னை போயஸ்கார்டனில் உள்ள மார்ட்டின் வீடு, மார்ட்டினின் மகன் வீடு மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளரும், அவரின் மருமகனுமான ஆதவ் ஆர்ஜுனா வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதிகாலை தொடங்கப்பட்ட சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் அமலாக்கத்துறையினர் ஆதவ் ஆர்ஜுனா வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.