நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் படங்கள் தயாரிக்கவும் செய்கிறார். இவரது தயாரிப்பில் கடந்த மாதம் வெளியான 'லோகா சாப்டர் 1' திரைப்படம், அதிகளவிலான வசூலை அள்ளியது. மேலும், மலையாள சினிமாவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்தது. இதனிடையே, கடந்த மாதம் கொச்சியில் உள்ள துல்கர் சல்மான் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, அவரின் 2 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், சென்னையில் கிரீன்வே சாலையில் உள்ள துல்கர் சல்மானுக்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அதனுடன், அவரது தயாரிப்பு நிறுவன அலுகத்திலும் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூடானில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.