Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

08:11 AM Nov 24, 2023 IST | Web Editor
Advertisement

ப்ரணவ் ஜுவல்லர்ஸ் மோசடி வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர்
பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisement

திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரணவ் ஜுவல்லரி இயங்கி வந்தது. இதன் இயக்குநர்களாக திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா இருந்து வந்தனர்.

குறிப்பாக, ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2 சதவீதம் வட்டி வழங்கப்படும் எனவும் அப்படியில்லை என்றால் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்க நகைகளை 10 மாதங்கள் கழித்துப் பெறலாம் என்றும் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டனர். இது மட்டுமின்றி 11 மாதம் சீட்டு கட்டினால் 12ஆம் மாத தவணையை இலவசம் என்றும் அறிவித்தனர்.

இதனை நம்பி ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்திய நிலையில், கடந்த மாதம் பிரணவ் ஜுவல்லர்ஸ் அனைத்து நகைகடைகளும் மூடி, அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகினர்.

ரூ.100 கோடி அளவுக்கு நடந்த இந்த மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவினர், கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி அந்தக் கடைக்கு சொந்தமான இடங்களில் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில்  ப்ரணவ் ஜுவல்லர்ஸ் நிர்வாகத்தினர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக அமலாக்கத் துறையினர் புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்து, தமிழகம் முழுவதும் அந்த கடைக்கு தொடர்புடைய சுமார் 11 இடங்களில் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத 11.60 கிலோ தங்க நகைகள், ரூ.23.70 லட்சம் ரொக்கம், ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக அந்த மோசடியில் தொடர்புடைய நபர்களிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ப்ரணவ் ஜுவல்லர்ஸ் விளம்பரங்களில் நடித்த பிரகாஷ்ராஜுக்கு சம்மன் அனுப்பியிருப்பதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.  அதன்படி, ஓரிரு நாள்களில் விசாரணைக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆஜராவார் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.

Tags :
Actor Prakash RajEDed raidEnforcement Directorate (ED)Pranav Jewelerssummon
Advertisement
Next Article