அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு!
லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தங்களது காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை மண்டல துணை அலுவலகத்தில் பணிபுரிந்த அங்கித் திவாரி எனும் அதிகாரி திண்டுக்கல் மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் 13 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு டிஜிபியிடம் அமலாக்கத்துறை மதுரை மண்டல துணை அலுவலகத்தின் உதவி இயக்குநர் புகார் அளித்தார். அந்த புகாரில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் 35 பேர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், தலைமை குற்றவியல் நடுவர் நீதித்துறை நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்வதற்காக மனு அளித்திருந்தனர். அதோடு, அமலாக்கத்துறையினரும் அங்கிட்டு வாரியை காவலில் எடுத்து விசாரிக்க மனு அளித்தனர்.
இதையும் படியுங்கள்: தங்கம் விலை: தொடர்ந்து 2-வது நாளாக சரிவு!
லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்னும் அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்த வேண்டும், அதனால் தற்போதைக்கு அமலாக்க துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது என்று எதிர்வாதம் வைக்கப்பட்டது. மேலும் அங்கித் திவாரிக்கு வரும் 24-ம் தேதி வரையில் நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை தரப்பில் வழக்கு பதியப்பட்டது.
அதில், "அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் துறை ரீதியாக தங்களது கட்டுப்பாட்டில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும். குறிப்பாக அவர் லஞ்சம் வாங்கியது தொடர்பான உண்மை விவரத்தை கண்டறிய விசாரிக்க வேண்டியுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த மனுவை விசாரித்த திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் அமலாகத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், "லஞ்சம் வாங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் அங்கித் திவாரியை எங்களது துறைரீதியிலான கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும். இதுகுறித்த அனுமதியை வழங்கி உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.