வேலைவாய்ப்பு - இஸ்ரேலுக்கு படையெடுக்கும் இந்தியர்கள்..!
இஸ்ரேலிய கட்டுமான பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இந்த பணிகளுக்கு செல்ல நேர்காணலுக்கு சென்றுள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் 25000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இருநாடுகளுக்கு இடையே தொடரும் போரால், இந்த நாடுகளின் பொருளாதாரமும் பின்னடைந்துள்ளது.
இப்போரினால், பாலஸ்தீன தொழிலாளர்கள் இஸ்ரேலில் வேலைக்கு செல்வதுமில்லை, அவர்கள் அங்கு அனுமதிக்கப்படுவதும் இல்லை. இதனால், இஸ்ரேலின் கட்டுமான தொழில் நிறுவனங்கள் தங்கள் அரசிடம் பாலஸ்தீன தொழிலாளர்களின் இடத்தை நிரப்ப இந்தியர்களை பணிஅமர்த்த அனுமதி கோரியுள்ளது. இதற்கிடையில் இந்திய தொழிலாளர்களின் குடியேற்றத்தை செயல்படுத்துவதற்காக இந்தியா கடந்த ஆண்டு இஸ்ரேலுடன் ஒப்பந்தமும் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது;
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளது. இங்கு வேலை இல்லாமல் இருப்பதற்கு போரில் சிக்கி தவிக்கும் நாட்டில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்கிறோம். நாங்கள் பலர் மூன்று நாட்களாக பேருந்தினுள் உறங்கிக் கொண்டு, சாலையோர உணவகங்களில் உள்ள கழிவறையைப் பயன்படுத்தி, எங்கள் நேர்காணலுக்காகக் காத்திருக்கிறோம் எனக் கூறினர். மேலும் பலர் தங்கள் வறுமை நிலையினை கூறினர்.
இதுகுறித்து மூத்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது;
எங்களிடம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் உள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் செல்லும் மக்களின் உரிமைகளை நாங்கள் உறுதிபடுத்துவோம். குடியேறும் இந்தியர்களின் பாதுகாப்பையும், அவர்கள் பாதுகாக்கப்படுவதையும் இந்தியா உறுதிபடுத்தும் என அவர் கூறியுள்ளார்.