அலுவலகத்திலேயே உறங்கும் பழக்கம் கொண்ட எலான் மஸ்க் - வியக்க வைக்கும் காரணம் என்ன தெரியுமா?
உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது அலுவலகத்தின் அறைகளிலேயே தங்கிவிடுவாராம். அதற்கான காரணம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் அந்த நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டார். இவர் டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ், போரிங் கம்பெனி பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். டெஸ்லா கார்கள் வெளியான சில நாள்களிலேயே டெஸ்லாவின் பங்குகள் பல மடங்கு உயர்ந்ததால் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். பின்னர், ட்விட்டர் நிறுவனத்தை இவர் அதிக விலை கொடுத்து வாங்கியதால் தனது முதல் இடத்தை இழந்தார்.
எலான் மஸ்க், 2022-ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த 29வது வருடாந்திர பரோன் முதலீட்டு மாநாட்டின் போது, வேலை கலாச்சாரம் பற்றி பேசும் வீடியோ கடந்த சில தினங்களாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், அவர் தான் தனது அலுவலகத்திலேயே தங்கிவிடுவதாகவும், அதற்கான பிரத்யேகமான காரணத்தையும் பகிர்ந்துள்ளார். கேட்பதற்கு வியப்பாக இருந்தாலும், ஒரு சிறந்த முதலாளிக்கான எடுத்துக்காட்டு என நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது,
“நான் எனது அலுவலக தளத்திலேயே தங்குவது வழக்கம். அதற்கு காரணம் என்னால் உயர்தர ஹோட்டல்களில் தங்க முடியாததால் அல்ல. என்னால் விலை உயர்ந்த மதுவகைகளை அருந்தி விட்டு, தீவுகளில் உள்ள ஹோட்டல்களில் தங்க முடியும். ஆனால் என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் நபர்களை விட என்னுடைய நிலை மோசமானதாக இருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
மேலும் அவர்கள் நேரம் அடிப்படையில் அலுவலகத்திற்கு வரும் போது, எப்போதும் நான் அவர்கள் அணுகுவதற்கு ஏதுவாக இருக்க வேண்டும். அவர்கள் வலியை உணரும் போதெல்லாம், என்னுடைய வலி மோசமாக இருப்பதாக அவர்கள் உணரவேண்டும்” இவ்வாறு அவர் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.