நேருக்கு நேர்...கமலா ஹாரிஸை விவாதத்திற்கு அழைத்த எலான் மஸ்க்!
முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை தொடர்ந்து, அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸையும் நேர்காணல் செய்ய தயார் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் காண்கிறார்.
அதிபர் தேர்தலில், டிரம்பை ஆதரிப்பதாக அறிவித்த உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் டிரம்பின் தேர்தல் நிதியாக 375.80 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இந்நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப்பை எலான் மஸ்க் இன்று நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேஸில் நடைபெற்றது. அதில் பல கேள்விகளுக்கு டிரம்ப் பதிலளித்தார்.
இந்த நேர்காணலில் கமலா ஹாரிஸ் குறித்து அவர் பேசியதாவது;
“கமலா ஹாரிஸ் அமெரிக்காவை அழித்து விடுவார். அவருடைய பொருளாதாரச் சிந்தனைகள் நாட்டுக்குக் கேடு விளைவிக்கும். ஏற்கெனவே பணவீக்கத்தால் அமெரிக்கப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. அமெரிக்கர்கள் மத்தியில் சேமிப்பு குறைந்துவிட்டது. மேலும் அமெரிக்கர்கள் கடன் வாங்கி செலவழிக்க ஆரம்பித்துவிட்டனர். கமலா ஹாரிஸ் அதிபரானால் இது மேலும் மோசமாகும். கமலா ஹாரிசை வரவேற்றுள்ள சட்டவிரோத நபர்களின் எண்ணிக்கை நாம் நினைப்பதை விட அதிகம். அவரைத் தேர்ந்தெடுத்தால் நாட்டில் வணிகம் இல்லாமல் போய்விடும்” என கமலா ஹாரிஸை தாக்கிப் பேசினார்.
இந்நிலையில், ‘கமலா ஹாரிஸை எக்ஸ் ஸ்பேஸஸிலும் நேர்காணல் செய்வதில் மகிழ்ச்சி’ என எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.