பொள்ளாச்சி டாப்சிலிப் முகாமில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட யானை பொங்கல் விழா!
பொள்ளாச்சி அடுத்துள்ள டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனசரகம், டாப்சிலிப்பில் அமைந்துள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் 26 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பணிகளுக்கும் உதவியாக இருக்கும் இந்த யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் தினத்தன்று யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தாண்டு டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் கொண்டாடபட்ட யானை பொங்கல் விழாவில் யானைகளை குழிப்பாட்டி, பொட்டு வைத்து மாலைகள் அணிவித்து, மரியாதை செய்யப்பட்டு முன்னதாக அங்குள்ள விநாயகரை யானைகள் தும்பிக்கையை தூக்கி மண்டியிட்டு வணங்கியன.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், “வழக்கமாக வீட்டு பொங்கல், மாட்டுப்பொங்கல், பூப்பொங்கல் கொண்டாடுவோம். ஆனால் இந்த வனப்பகுதியில் யானைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடபட்ட யானை பொங்கல் விழாவில் கலந்து கொள்வது புது அனுபவம் மற்றும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு ஒரே இடத்தில் 26க்கும் மேற்பட்ட யானைகளை பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்தனர்.