புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு!
புதுச்சேரியில் ஆண்டு தோறும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. மின்துறையின் வரவு செலவு கணக்குகளை கணக்கிட்டு கட்டணத்தை உயர்த்த கோவாவில் உள்ள இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்துறை கோரிக்கை வைக்கும்.
இதைத்தொடர்ந்து ஆணையம் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகேட்டு கட்டணங்களை உயர்த்த அனுமதி அளிக்கும். ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு வழக்கமாக அமலுக்கு வரும். இந்த நிதியாண்டிற்கான (2024-25) கட்டணத்தை நிர்ணயிக்கும் விதமாக கடந்த டிசம்பர் மாதம் மின்கட்டணத்தை உயர்த்த புதுவை மின்துறை ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது. ஜனவரி மாதத்தில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதுவை வந்து பொதுமக்களிடம் கருத்து கேட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இதன்படி வீட்டு உபயோக மின்சாரத்துக்கான கட்டணம் உயர்ந்தது. 100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் ரூ.2.25 லிருந்து ரூ.2.70 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3.25லிருந்து ரூ.4 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் ரூ.5.40லிருந்து ரூ.6 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80லிருந்து ரூ.7.50 ஆக உயர்ந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் புதுச்சேரியில் வீடுகளுக்கு மின் கட்டண மானிய திட்டத்தினை புதுச்சேரி அரசு அறிவித்தது.
அதன்படி யூனிட்டுக்கு 45 பைசா வரை மானியம் கிடைக்கும். இந்நிலையில் மின்கட்டணம் மீண்டும் உயர்கிறது. இது அக்டோபர் 1ம் தேதி மின் பயன்பாட்டிலிருந்து அமலுக்கு வருகிறது. குறிப்பாக வீட்டு உபயோகத்தில் 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ. 2.90ம், 101- 200 யூனிட் வரை ரூ. 4.20ம், 201 முதல் 300 யூனிட் வரை ரூ. 6.20ம், 301 முதல் 400 யூனிட் வரை 7.70 ரூபாயும் உயர்த்த இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் புதுச்சேரிக்கு மின்துறைக்கு பரிந்துரைத்துள்ளது.
 
 
            