சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே மின்சார ரயில் சேவை தொடக்கம்!
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் சேவை தொடங்கியுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு தினமும் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மின்சார ரெயில் பாஸ்ட் மின்சார ரயில் ஆகும். சென்னை கடற்கரையில் மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில், வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு இரவு 9.35 மணிக்கு சென்றடைகிறது.
இந்த நிலையில், பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்கும் வகையில் சென்னை கடற்கரை - வேலூர் கன்டோன்மென்ட் இடையே இயக்கப்பட்டு வரும் மெமு ரெயில் (06033/06034) மே 2-ம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது.
இதனிடையே, நேற்று அதிகாலை முதல் இயக்கப்படவிருந்த சென்னை கடற்கரை - திருவண்ணாமலை மின்சார ரயில் சேவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், திருவண்ணாமலை மற்றும் சென்னை கடற்கரை இடையிலான ரயில் சேவை இன்று (மே. 3) தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வேலூரில் இருந்து 6 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு வழக்கம் போல் காலை 9.50 மணிக்கு வந்து சேரும். பின்னர் சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது. தினசரி இயக்கப்படும் மின்சார ரயிலுக்கான கட்டணம் ரூ. 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.