தேர்தலும் தொழில்நுட்பமும்: 1996 தேர்தலில் இணையதளத்தை பயன்படுத்தி பிரச்சாரம் செய்த வேட்பாளரைப் பற்றி தெரியுமா?
1996 தேர்தலிலேயே இணையத்தை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்த வேட்பாளரை பற்றி தெரியுமா..? வாருங்கள் விரிவாக தெரிந்து கொள்வோம்.
மிகப்பெரும் ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் தேர்தல் திருவிழா தொடங்க உள்ளது. வேட்பாளர் பட்டியல்களும், தொகுதி பங்கீடுகளுமாக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலில் மிக முக்கியமாக ஒன்றாக கருதப்படும் பிரச்சாரங்கள் பல புதிய புதிய வடிவங்களாக மாறியுள்ளன.
பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, இணையம், சமூக வலைதளம் மற்றும் செயற்கை நுண்ணறிவு என அவை புதிய பரிணாமத்தை எடுத்துள்ளன. தேர்தல் பிரச்சாரங்களில் வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ்கள் போன்றவற்றிற்கு அரை நூற்றாண்டு கால வரலாறு இருக்கிறது. ஆனால் அவற்றில் இணையம் எப்போது இணைந்தது என்பது பற்றி தெரியுமா? வாருங்கள் விரிவாக தெரிந்து கொள்வோம்.
1975ம் ஆண்டுதான் மைக்ரோசாப்ட் தொடங்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கணினி மற்றும் MS-DOS மென்பொருள் என தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய புரட்சியை செய்த மைக்ரோசாப்ட் பல நிறுவனங்களை கணினி மையமாக்கி மிகப் பெரிய பொருளாதார கட்டமைப்புள்ள தொழில்நுட்ப ஜாம்பவானாக தன்னை தக்கவைத்துக் கொண்டது. 90களின் குழந்தைகளுக்கு மிகவும் பரிட்சையமான ஒன்று Yahoo.com . இது 1994ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்றைக்கு கூகுள் கொடிகட்டி பறப்பதுபோல அன்றைய காலகட்டத்தில் இணையதளத்தின் புரட்சியாக Yahoo கருதப்பட்டது.
இதன் பின்னர் தான் 1996ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் NBC என்கிற இணையதளத்தை முதன் முதலாக உருவாக்குகிறது. MSNBC என்கிற இணையதளம் தான் அமெரிக்காவின் தேர்தலில் முதன்முதலாக தேர்தல் பிரச்சாரத்தின் ஒருபகுதியாக இணையதள போஸ்டர்களை வெளியிட்டது.
1996ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் 4ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 53 வது பொதுத் தேர்தலாகும். இதில் ஜனநாயகக் கட்சித் தலைவரான பில் கிளிண்டன் குடியரசு கட்சி வேட்பாளரான பாப் டோலை தோற்கடித்தார். இந்த தேர்தலில்தான் முதன் முதலாக இணையதள போஸ்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. பில் கிளின்டன் மற்றும் பாப் டோலுக்கு தனித் தனியாக இணையதள பிரச்சாரங்கள், இணைய போஸ்டர்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகின.
டிஜிட்டல் வடிவமைப்பு நிறுவனமான Iguana.Inc-ன் நிறுவனர் மற்றும் அரிசோனா மாகாண பல்கலைக்கழக மாணவரான ரோப் குபாஷ்கோவும் இணைந்துதான் பாப் டோலுக்கான போஸ்டர்களை தயாரித்து வெளியிட்டனர். அதேபோல இந்த தேர்தலில் கிளன்டன் மற்றும் பாப் டோலுக்கு தனித்தனியான இணையதளங்களும் தொடங்கப்பட்டு அதன் வழியாக பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் கிளின்டனின் இணையதள பிரச்சாரத்திலிருந்து தங்களை தனித்துவமாக காட்ட பல முக்கியமான அம்சங்களை வடிவமைத்தது பாப் டோலின் அணி. அதன்படி டோல் தளத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான விரிவான திட்டங்கள், பட்ஜெட் குறித்த தகவல்கள் , மக்கள் நன்கொடைகள் வழங்கக்கூடிய பக்கங்கள், "டோல் இன்டராக்டிவ்" என்று பெயரிடப்பட்ட ஒரு பகுதி , போஸ்டர்கள் மற்றும் அஞ்சல் அட்டைகள் என இணைய பயன்பாட்டாளர்கள் சுலபமாக பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டது.
அமெரிக்க தேர்தலில் முதன்முதலாக கணினிமயமாக்கப்பட்ட பிரச்சாரங்களும், இணைய போஸ்டர்களும் ஆச்சர்யத்தக்கதாகவும் மிகுந்த வரவேற்பையும் பெற்றது என்றால் அது மிகையல்ல.
-அகமது AQ