"தேர்தலில் யாருடனும் கூட்டணி வேண்டாம்" - தவெக தலைவர் விஜயிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்!
வருகின்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டாம், தனித்தே போட்டியடலாம் என தவெக தலைவர் விஜயிடம் அந்த கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். அந்த வகையில் இன்று (நவ.3) தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 50-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அனைத்து பேரவைத் தொகுதிகளுக்கும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், பயணத்திட்டங்களை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், விக்கிரவாண்டி மாநாட்டில் தேவையானது மற்றும் தேவையிலாதவை குறித்து கட்சி நிர்வாகிகளிடம் தவெக தலைவர் விஜய் கருத்து கேட்டுள்ளார். வரும் காலங்களில் அவற்றை சரிசெய்வதாகவும் தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : கேரள ரயில் விபத்து… தலா ரூ.3 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் #MKStalin அறிவிப்பு!
வரும் தேர்தல்களில் யாருடனும் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டாம், தனித்தே போட்டியிடலாம் என வலியுறுத்தியதாகவும், கூட்டணி குறித்து பிறகு ஆலோசித்து முடிவெடுப்போம் என தவெக தலைவர் விஜயிடம் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நாம் தமிழர் கட்சி, விசிக கட்சிகளின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் கட்சிப்பணியை மட்டும் பாருங்கள் என நிர்வாகிகளிடம் விஜய் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.