நெருங்கும் தேர்தல் முடிவுகள் - புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சம் தொட்டன.
இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49) நடைபெற்றது.
இந்த நிலையில் பொதுத் தேர்தல் முடிவுகள் மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் (FPIs) வரத்து அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் டெல்லி தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி திங்கள்கிழமையான இன்று இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டன.
வர்த்தம் தொடங்கியது முதல் நிறைவடையும் வரை இந்திய பங்குச்சந்தைகள் தொடர் உச்சத்தில் இருந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 75 புள்ளிகள் அதிகரித்து 75,426 ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 103 புள்ளிகள் அதிகரித்து 23,060 ஆகவும் வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.