சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச் சீட்டை சிதைத்த விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மாஷி!
சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் நடத்திய அதிகாரியான அனில் மாஷி தனது நடத்தைக்காக உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
சண்டிகர் மாநகராட்சிக்கு ஜனவரி மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் INDIA கூட்டணி சார்பில் குல்தீப் குமாரும், பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும் போட்டியிட்டனர். இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. INDIA கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும் INDIA கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. அதனால், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.
தேர்தல் நடத்திய அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் அளிக்க விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதோடு, தேர்தல் ஜனநாயகம் நசுக்கப்படுவதை தடுக்க தங்களது உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்துவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது தனது செயல்பாடுகளுக்காக நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக தேர்தல் நடத்திய அதிகாரி சார்பாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வாக்கு சீட்டுகளில் தான் எந்த திருத்தமும் செய்யவில்லை என கூறிய முந்தைய பிரமாண பத்திரத்தை திரும்ப பெறவும் அனுமதி கோரினார். இதனை அடுத்து வழக்கு விசாரணையை ஜூலை மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.