3 தலைமுறையாக அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மலைவாழ் மக்கள் - அரசு நடிவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஏலகிரி மலையில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கடந்த மூன்று தலைமுறையாக மின்சாரம், குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதி அடைந்துவரும் நிலையில், அரசு நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை சுற்றுலாத்தலமாக
விளங்கி வருகிறது. இப்பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள்
வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள நிலாவூர் அடுத்த காரைபாறை வட்டத்தில் வசித்து வரும் மலைவாழ் மக்கள் கடந்த மூன்று தலைமுறையாக அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் சாலைவசதி, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். சாலை வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் 5 கிலோ மீட்டர் நடந்து சென்று பள்ளியில் பாடம் பயின்று வருகின்றனர். அதே நேரத்தில் பள்ளி மாணவர்கள் இரவு நேரங்களில் மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை புகார் மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.