மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராகிறார் ஏக்நாத் ஷிண்டே!
மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்க உள்ளார்.
மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக, ஏக்நாத் சிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும் முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. காரணம் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றியது.
பாஜக 132 தொகுதிகளில் அமோக வெற்றிப் பெற்ற நிலையில், முதலமைச்சர் பதவி தேவேந்திர பட்னாவிஸ்க்குதான் என உறுதியாக இருந்தது. ஆனால் பீகாரில் குறைந்த இடத்தை கைப்பற்றிய நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது போல ஏக்நாத் ஷிண்டேக்கு வழங்கப்பட வேண்டும் என சிவசேனா தரப்பு கூறியது. இதனால் குழப்பம் நீடித்து வந்தது.
ஆனால் அதிக இடங்களை கைப்பற்றியவருக்குதான் முதலமைச்சர் பதவி எனவும், ஏக்நாத் ஷிண்டேக்கு துணை முதலமைச்சர் பதவிதான் வழங்கப்படும் என பாஜக உறுதியாக கூறியது. இதன் முடிவாக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று மாலை முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். துணை முதலமைச்சர்களாக சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் என்சிபியின் அஜித் பவார் பதவியேற்கின்றனர். அவர்களுக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்க உள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநிலங்களின் முதலமைச்சர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.