"ஞானவாபி உள்ளிட்ட பிரச்னைகளை எப்படி தீர்க்கலாம்?" அஜ்மீர் தர்ஹா தலைமை இமாம் கருத்து!
மதுரா, வாரணாசி மசூதிகளின் பிரச்னைகளை நீதிமன்றத்திற்கு வெளியே அமைதியான முறையில் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என அஜ்மீர் தர்ஹாவின் தலைமை இமாம் ஜைனுல் ஆப்தீன் அலி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணர் பிறந்தார் என்பது நம்பிக்கை. அந்த பகுதியில் கிருஷ்ணர் கோயில் உள்ளது. அதையொட்டி ஷாஹி ஈத்கா மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி கடந்த 1669-70-ம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த மசூதி மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதன் மேல்முறையீட்டு வழக்குகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
அதாவது, மதுராவிலிருந்த கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்தில் கேசவ் தேவ் கோயில் இருந்தது என்றும், அது முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் இடிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
அதன் பிறகு மீதியிருந்த பகுதியில் புதிதாக கிருஷ்ண ஜென்மபூமி கோயில் கட்டப்பட்டுள்ளது. இதனால், இக்கோயிலின் கருவறை உள்ள இடம் உண்மையானது அல்ல எனவும், பழைய கோயிலின் கருவறையை கண்டறிந்து அடையாளப்படுத்தும்படியும் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்து தான் ஞானவாபி மசூதி கட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த பிரச்னைகள் தொடர்பாக அஜ்மீர் தர்ஹாவின் தலைமை இமாம் ஜைனுல் ஆப்தீன் அலி கூறியதாவது:
"உலக அமைதியில் இந்தியா தனது பங்கை ஆற்றி வருகிறது. நமது நாட்டின் மதுரா, வாரணாசி மசூதிகளின் பிரச்னைகளை நீதிமன்றத்திற்கு வெளியே அமைதியான முறையில் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய இந்திய குடியுரிமையையும் பறிக்கப் போவதில்லை. எந்தவொரு இந்தியரின் குடியுரிமையையும் பறிக்க முடியாது, ஏனெனில் அதற்கு சட்டத்தில் வழி இல்லை."
இவ்வாறு அவர் கூறினார்.