மலப்புரத்தில் கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் பணி தீவிரம்!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள உறங்காத்திரி கிராமத்தில் கடந்த சில நாட்களாகவே, காட்டு யானைகள் அட்டசாகம் அதிகரித்து வருவதாக அக்கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக ஓடக்காயம் வார்டு பகுதியில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
அவை ஏக்கர் கணக்கில் பயிர்களை நாசம் செய்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இரவு நேரங்களில் வரும் யானைகள் ரப்பர், தென்னை, பாக்கு போன்ற பயிர்களை நாசம் செய்கின்றன. இதுதொடர்பாக வார்டு உறுப்பினர் பி.எஸ்.ஜினேஷ் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து, யானைகளை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கிராமத்திற்குள் வந்த யானைகளை மக்கள் விரட்டியத்துள்ளனர். அப்போது செல்லும் வழியில் சன்னி என்பவரது தோட்டத்தில் உள்ள 25 அடி ஆழம் கொண்ட கிணற்றில் யானை ஒன்று தவறி விழுந்தது. தொடர்ந்து கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்கப்படும் யானையை அப்பகுதிக்குள் விடாமல் தொலைதூர வனப்பகுதிக்குள் சென்று விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.