Eee Sala Cup Namde.. - பேப்பரில் எழுதி விநாயகர் சிலையின் முன் வைத்து வழிபட்ட முரட்டு #RCB ரசிகர்!
இந்த முறை கோப்பை ஆர்சிபி அணிக்குத் தான் என பேப்பரில் எழுதி அதனை விநாயகர் சிலை முன்வைத்து வழிபட்ட ஆர்சிபி அணி ரசிகரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஐபிஎல் 2024 மார்ச் 22ம் தேதி தொடங்கி மே 26ம் தேதி வரை நடைபெற்றது. ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே 26ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதன் மூலம் கொல்கத்தா அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் கோப்பைகள் வென்றுள்ளன.
நட்சத்திர வீரர்கள் அதிகளவில் இடம்பெற்ற போதிலும் இதுவரை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை. அடுத்த முறையாவது ஆர்.சி.பி அணி கோப்பையை வென்று ரசிகர்களுக்கு அதனை சமர்பிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகர் சிலையின் பாதத்தில் 'ஈ சாலா கப் நமதே (இந்த ஆண்டு கோப்பை நமதே) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2025' என்று எழுதப்பட்ட காகிதத்தை ரசிகர் ஒருவர் வைத்து வழிபாடு செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
ஐபிஎல் போட்டிகளின் வரலாற்றில் ஒன்பது முறை பிளேஆஃப் சுற்றுக்கு சென்று மூன்று இறுதிப் போட்டிகளில் விளையாடிய பெங்களூரு அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.