Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#EDRaid | முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக சோதனை… அமலாக்கத்துறை அதிரடி!

09:37 AM Oct 24, 2024 IST | Web Editor
Advertisement

அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினருமான வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் தற்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருக்கிறார். தற்போது ஒரத்தநாடு எம்எல்ஏவாகவும் உள்ளார். இந்நிலையில் 2011-16 கால அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி வழங்க, லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த அபார்ட்மென்ட் கட்டுவதற்கு 28 கோடி ரூபாய் வைத்திலிங்கம் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டது. ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனம் 27 கோடியே 90 லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுத்த பிறகு, அமைச்சர் ஒப்புதல் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் இரண்டு பேர் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தது.

இந்த சூழலில், நேற்று (அக்.23) காலை 8 மணிமுதல் சென்னை மற்றும் தஞ்சாவூரில் உள்ள வைத்திலிங்கத்தின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். வைத்திலிங்கம் வீட்டில் சோதனை நடைபெற்ற அதே தருணத்தில் அவரது மகனின் சென்னை தியாகராய நகர் வீட்டிலும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர். கிட்டதட்ட 5 மணி நேரமாக நடைபெற்ற சோதனைகளின் போது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டனவா? என்பது குறித்து அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினருமான வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக இன்று (அக்.24) சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் நேற்று இரவு சோதனை முடிவடைந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் 6 இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் போது, வைத்திலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணம் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ADMKEDed raidEnforcement Directoratenews7 tamilOPStanjavurvaithilingam
Advertisement
Next Article