எடிசன், மார்கோனிக்கே டஃப் கொடுத்த டெஸ்லா...!
உலக அளவில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு பெயர்தான் டெஸ்லா. இந்த பெயரைக் கேட்டதும் உங்களுக்கு என்ன ஞாபகம் வருகிறது. டெஸ்லா என்றதும் பெரும்பாலும் அதன் பெயரில் பிரபலமாக அறியப்படும் கார் அல்லது அதன் உரிமையாளரான எலான் மஸ்க் உங்களது ஞாபகத்திற்கு வருவார்கள். ஆனால் எலான் மஸ்க் தனது நிறுவனத்திற்கு டெஸ்லா என பெயர் வைக்க காரணம் என்ன..? யார் இந்த டெஸ்லா..? இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்...
எதிர்கால உலகின் தீர்க்கதரிசி என்று போற்றக்கூடிய நிகோலா டெஸ்லா 10 ஜூலை, 1856-ல் ஆஸ்திரிய பேரரசுப் பகுதியில் இருந்த ஸ்மிலிஜான் கிராமத்தில் பிறந்தார். அங்கே தனது இளமை பருவத்தை கழித்த அவர் அமெரிக்கா என்ற கனவு தேசத்திற்கு சென்று எடிசனிடம் எஞ்சினியராக வேலைக்குச் சேர்ந்தார்.
தனது கண்டுபிடிப்பின் மூலம் நேர்திசை மின்னோட்டத்தைவிட (DC) , எதிர்திசை மின்னோட்டத்தை ( AC) பயன்படுத்தினால் இன்னும் எளிதாகவும், குறைவான செலவிலும் மின்சாரத்தை நீண்ட தூரம் கடத்த முடியும் என்று டெஸ்லா நம்பினார். அதனை தனது குருவான எடிசனிடம் கூறுகையில், ‘வேலைக்காகாத ஐடியா’ என்று அவர் நிராகரித்தார்.
தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கைக் கண்டுபிடித்தவர் என்று அறியப்பட்டாலும், மின்விளக்கை (பல்பு) வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு நிகோலா டெஸ்லாவின் பங்கு இன்றியமையாத ஒன்று.
இதேபோல உலக அளவில் அறியப்பட்ட விஞ்ஞானியான மார்கோனி ரேடியோவைக் கண்டுபிடிப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே, ரேடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறிய படகை உருவாக்கி அதனை ரிமோட் மூலம் டெஸ்லா குறிப்பிட்ட தொலைவு இயங்கச் செய்தார்.
ரேடியோவின் முக்கியமான பங்களிப்பில் தனது காப்புரிமையை மார்கோனி பயன்படுத்தியுள்ளார் என்று தெரிந்தபோதிலும் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று பெருந்தன்மையுடன் டெஸ்லா விட்டுக்கொடுத்தார். டெஸ்லா இறந்து 6 மாதங்களுக்கு பின்னரே, அமெரிக்க உச்ச நீதிமன்றம் மார்கோனியின் ரேடியோவிற்கான காப்புரிமையை ரத்து செய்தது.
நோபல் பரிசு பெற்றதால் மார்கோனியை ரேடியோவின் கண்டுபிடிப்பாளராக இன்று பலருக்கும் தெரியும், ஆனால் சிலருக்கே டெஸ்லாவையும் ரேடியோவின் ஆரம்பமும் தெரியும். 1896-ல் நயாகரா நீர்வீழ்ச்சியில் தான் முதன்முதலாக நீர்மின் நிலையம் (Hydroelectric powerplant) அமைத்தார்கள். அதனை டெஸ்லா தான் வடிவமைத்தார்
டெஸ்லா சுருள் ஒரு உயர் மின்னழுத்த மின்மாற்றி ஆகும். குறைந்த மின்னோட்டம் , உயர் அதிர்வெண் மாற்று மின்னோட்ட மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் யுக்தியையும் டெஸ்லா கண்டுபிடித்தார்
நாம் இன்று பயன்படுத்தும் ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட மின் சாதனங்கள் அனைத்திலும் பயன்படும் டிரான்சிஸ்டருக்கான (transistor) காப்புரிமையை 1989ம் ஆண்டிலேயே டெஸ்லா வைத்திருந்தார். என்னதான் நம்ம கம்யூட்டரில் உட்கார்ந்து கொண்டு 8 மணிநேரம் கீபோர்டை தட்டிட்டு 16 மணிநேரம் ஓய்வு என்கிற பெயரில் வாழ்க்கைய கழிக்கிறோம். ஆனால் நம்ம டெஸ்லா 22 மணிநேரம் கடினமா உழைத்துவிட்டு 2 மணிநேரம் தான் தூங்கிருக்காருனா உங்களால் நம்ப முடிகிறதா?.
மாற்று மின்னோட்டம், தூண்டல் மோட்டார், டெஸ்லா சுருள், வயர்லஸ் பவர் டிரான்ஸ்மிஷன், எக்ஸ்ரே உள்ளிட்டவைகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய டெஸ்லா ஜனவரி 7, 1943ம் ஆண்டு நியூயார்க்கில் இயற்கையை எய்தினார்.
தன்மேல் நம்பிக்கை வைத்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கு எடுத்துக்காட்டாக நிகோலா டெஸ்லா திகழ்ந்தார். இவ்வளவு கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதால்தான் எலான் மஸ்க் தனது நிறுவனத்திற்கு டெஸ்லா எனப் பெயர் சூட்டி அவரை கௌரவப்படுத்தியுள்ளார்.
- ஜெ.வெங்கடேஷ்