கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி!
அதிமுக நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் உடல்நிலை குறைவு காரணமாக நேற்று (மார்ச் 26) காலை திருநெல்வேலியில் காலமானார். அதிமுக அமைப்பு செயலாளராக இருந்து வந்தவர், 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அதிமுக செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை நேரில் வந்து கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் கருப்பசாமி பாண்டியன் மகனும், அதிமுக மாநில எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணை செயலாளருமான வி.கே.பி. சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி கே.பழனிசாமி, "போற்றுதலுக்கும் மிகுந்த மரியாதைக்கும் உரிய கருப்பசாமி பாண்டியன் தென் மாவட்டங்களில் முத்திரை பதித்தவர். எம்ஜிஆர் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்.
கட்சியை உயிராக நேசித்தவர். எம்ஜிஆர் காலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். தென் மாவட்ட மக்களும் அதிமுகவினரும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அதிமுகவின் தூணாக விளங்கியவர். நான் முதல்வராக பொறுப்பேற்ற போது என்னை நேரில் சந்தித்து எங்களுடைய முழு ஆதரவு உங்களுக்கு உண்டு என்று தெரிவித்தார்.
அவருடைய இழப்பு அதிமுகவிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினருக்கும், தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என்று தெரிவித்துள்ளார்.