“பொருளாதாரம் கல்விக்கு தடையாக இருக்கக்கூடாது... ஆக. 9ல் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் தொடங்கப்படும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழ்ப் புதல்வன் திட்டம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி கோவையில் தொடங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, கொளத்தூர் கபாலீஸ்வரர் கல்லூரியில் இன்று நடைபெற்ற மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
‘’எவ்வளவு வேலைகள் இருந்தாலும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறையேனும் கொளத்தூர் தொகுதிக்கு வந்துவிடுவேன். கொளத்தூருக்கு வந்தாலே ஒரு புது எனர்ஜி கிடைத்துவிடும். கொளத்தூர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளும் என்னுடைய தொகுதி தான். ஆளுங்கட்சித் தொகுதி, எதிர்க்கட்சித் தொகுதி என்று நாங்கள் பாகுபாடு பார்ப்பதில்லை. எந்த கட்சி எம்எல்ஏவாக இருந்தாலும் சரி, அவர்களது கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.
1,400-க்கும் மேற்பட்ட கோயில்களில் திமுக அரசு குடமுழுக்கு நடத்தி இருக்கிறது. ரூ.5000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்களை மீட்டுள்ளோம். கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கியுள்ளோம். இறைப்பணி மட்டுமல்லாமல், கல்விப் பணியும் இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது. அறநிலையத் துறைக்கு உட்பட்ட கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. அறநிலையத்துறை, அறிவுத்துறையாகவும் செயல்படுகிறது.
தமிழ்ப் புதல்வன் திட்டம்
உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அவர்களின் உயர் கல்விக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.
இதற்காக அண்மையில், ரூ.401 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் கோவையில் தொடங்கி வைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.