ஈஸ்டர் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்… தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது ஈஸ்டர். இயேசு சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்தார் என்று பைபிள் கூறுகிறது.
இயேசு உயிர்த்தெழுந்த இந்த நாளை தான் கிறிஸ்தவர்கள் ஈஸ்டராக கொண்டாடி வருகின்றனர். அதன்படி இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலிகள் நடந்தன.
வேளாங்கண்ணி
உலக பிரசித்தி பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று இரவு ஈஸ்டர் திருநாளையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலய கலை அரங்கத்தில் ஈஸ்டர் திருநாள் திருப்பலி தொடக்கத்தில் பாஸ்கா திருவிழிப்புசடங்கு நடந்தது. இதில் ஏசு உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் ‘‘பாஸ்காஒளி’’ யை பேராலய அதிபர் இருதயராஜ் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து பிரார்த்தனைகள் தொடங்கின. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரகணக்கானோர் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
பின்னர், இரவு 12 மணியளவில் வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் பேராலய கலையரங்கத்தின் மேற்கூரையில் சிலுவைகொடியை கையில் தாங்கிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய பங்குதந்தை அற்புதராஜ் மற்றும் பாதிரியார்கள் உள்ளிட்ட அருட்சகோதரிகள் கலந்துகொண்டனர்.
மணப்பாறை
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரின் மத்தியில் மிக பழமை வாய்ந்த கிறிஸ்தவ பேராலயமான புனித லூர்து அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இயேசு கிறிஸ்து
உயிர்தெழுந்த தினமான ஈஸ்டர் தினத்தையொட்டி நேற்று நள்ளிரவு மணப்பாறை மறைவட்ட அதிபர், பங்கு தந்தை தாமஸ் ஞானதுரை, கப்புசின் சபை அருட்தந்தை ஸ்டீபன் ஜெயர்டு ஆகியோர் தலைமையில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தேவாலயம் முழுவதும் இருள் நிரம்பி, கிறிஸ்துவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆண்டவரின் உயிர்ப்புக்காக ஜெபத்தனர்.
இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற திருப்பலியில் நள்ளிரவு 12 மணியளவில் இயேசுபிரான் உயிர்த்தெழுந்து வந்ததாக இயேசுவின் திருவுருவச்சிலை திறக்கப்பட்டது. பின்னர் பேராலயம் முழுவதும் ஒளி நிரம்பியது. இந்த ஈஸ்டர் சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.
சிந்தாதிரிப்பேட்டை
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள CSI சீயோன் ஆலத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஏப்.20) அதிகாலை 4.30 மணியளவில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். முன்னதாக, நேற்று இரவு ஆலத்தில் இயேசு உயிர்த்தெழும் நிகழ்ச்சி தத்ரூபமாக மக்களுக்கு காண்பிக்கப்பட்டது. இந்த வேளையில் கிறிஸ்தவர்கள் பட்டாசு வெடித்து இயேசு உயிர்த்தெழுவதை வரவேற்றனர்.
அதன் பிறகு பூஜிக்கப்பட்ட புனிதநீர் கிறிஸ்தவர்கள் மீது தெளிக்கப்பட்டு அருளாசி வழங்கப்பட்டது. இந்த ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையில் நியூஸ்7 தமிழின், Senior Strategic Advisor - Sales & Marketing ஷாம் குமார் மற்றும் சென்னை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் புனித வியாகுல அன்னை ஆலயத்தில் நேற்று நள்ளிரவில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது . பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலி நிகழ்ச்சி செய்யாறு பங்குத்தந்தை சுதர்சன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான அருள் பணியாளர்கள், கன்னியாஸ்திரிகள், கிறிஸ்தவ பெருமக்கள்
குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோட்டார் சவேரியார் பேராலயத்தில் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் சிறப்பு
பிரார்த்தனை நடந்தது. பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் இயேசு உயிர்ப்பு பெருவிழா திருப்பலி நடந்தது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார். அப்போது அங்கு கூடியிருந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசு வாழ்த்து பாடினர்.