#Earthquake | நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு!
நேபாளத்தில் இன்று அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
நம் நாட்டின் அருகே இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் நாடு நேபாளம். இது சிறிய நாடாகும். நேபாளத்தில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.59 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்.சி.எஸ்.) உறுதி செய்துள்ளது. தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் அறிக்கைகளின்படி, நேபாளத்தில் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. அட்சரேகையின் 29.17 வடக்கு மற்றும் தீர்க்கரேகை 81.59 கிழக்கில் இந்த நிலநடுக்கம் நிலை கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதம் குறித்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேபாளத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது.
ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் 157 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். அதனுடன் 8 ஆயிரம் வீடுகள் இடிந்து விழுந்தன. கடந்த 2015ம் ஆண்டு ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.