#Dharmapuri அருகே 3 மண்ஜாடிகள் கண்டெடுப்பு | "3500 ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருக்கலாம்" - அதிகாரிகள் தகவல்!
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே பழங்கால மண்ஜாடிகள் கண்டெடுக்கப்பட்டன.
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள ராசிக்குட்டை கிராமத்தில் மலைக் குன்றின் அடிவாரத்தில் பள்ளிச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது பானை ஓடு தென்பட்டுள்ளது. அதனை மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர் வித்யாகரன் அகற்ற முயன்றார். அப்போது அது மூன்று கால்கள் கொண்ட ஜாடி ஒன்றின் பகுதி என்பது தெரிய வந்தது. அதன் ஒரு பகுதி சிறிதளவு உடைந்திருந்தது. மேலும் இரண்டு உடைந்த மண்ஜாடிகளும் அங்கு இருந்தன.
இந்த மண் ஜாடிகள் குறித்து அந்த மாணவர் அவரது வரலாற்று ஆசிரியர் வீரமணியிடம் தெரிவித்தார். அந்த ஆசிரியர் தகடூர் அதியமான் வரலாற்றுச் சங்கத்தினரை தொடர்பு கொண்டு மண்ஜாடி குறித்து தகவல் அளித்தார். இதையடுத்து, அதியமான் வரலாற்று சங்கத் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர், முன்னாள் எம்.பி. ரா.செந்தில், நிர்வாகி வே.ராஜன் ஆகியோர் நேற்று (செப்.30ம் தேதி) ராசிக்குட்டைக்குச் சென்று அந்த மண்பாண்டங்களை ஆய்வு செய்தனர்.
இதையும் படியுங்கள் : INDvsBAN | இன்று கடைசி நாள் ஆட்டத்தில் வெல்லுமா இந்தியா? பரபரப்பான கட்டத்தில் கான்பூர் டெஸ்ட் போட்டி!
இதுகுறித்து அதியமான் வரலாற்று சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தாவது:
" இந்த மண் ஜாடி 3,500 ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருக்காலம். ராசிக்குட்டை குன்றின் ஓரங்களில் தொல்பழங்கால மனிதர்களின் ஈமச் சின்னங்கள் முன்பே கண்டெடுக்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் பங்குநத்தம், பெரும்பாலை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளிலும், 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு மனிதர்கள் வாழ்ந்து வந்திருப்பதற்கான சான்றுகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னானூர் அகழாய்வில் பழந்தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. இவ்வூர் கீழடி காலத்துக்கும் முந்தைய வாழ்விடமாக இருந்திருக்கலாம். இத்தகைய கண்டுபிடிப்புகள் தருமபுரி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்து வந்திருப்பதைக் காட்டுகின்றன"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.