“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்” - எலான் மஸ்க் கருத்து!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என டெஸ்லாவின் நிறுவனரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சுயேட்சை வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி அமெரிக்க முதன்மை தேர்தல் முறைகேடுகள் குறித்து தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில்,
“போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்ற முதன்மைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து நூற்றுக்கணக்கான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆவணங்கள் இருந்ததால் பிரச்னைகள் கண்டறியப்பட்டு வாக்குகள் எண்ணிக்கைகள் திருத்தப்பட்டன” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இவரின் இந்த பதிவை குறிப்பிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் தலைவரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,
“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்கள் மற்றும் ஏஐ மூலம் இயந்திரங்கள் ஹேக் செய்யப்படும் ஆபத்து சிறியதாக இருந்தாலும், வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.