தமிழ்நாடு விவசாயிகளுக்கு இ-கிசான் கிரெடிட் கார்டு - முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
தமிழ்நாட்டில் முதல்முறையாக (E-KCC) இ கிஷான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தர்மபுரியில் துவங்கி வைக்க உள்ளார்.
ரிசர்வ் வங்கியின் புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக, விவசாயக் கடன்களை டிஜிட்டல் முறையில் வழங்கும் நோக்கத்தில், 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் இ-கிசான் கிரெடிட் கார்டு (e-KCC) திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஃபெடரல் வங்கி கூட்டாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. சென்னை, கிருஷ்ணகிரி, மற்றும் மதுரை மாவட்டங்களில் முதலில் இந்தச் சோதனைத் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதற்கான காலதாமதத்தைக் குறைப்பது. பாரம்பரிய முறையில் கடன் பெறுவதற்கு 2 முதல் 4 வாரங்கள் வரை ஆகும் நிலையில், இந்த டிஜிட்டல் முறையில் சில நிமிடங்களில் கடன் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் தங்கள் நில ஆவணங்கள் மற்றும் பிற விவரங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
தமிழ்நாட்டின் மின் ஆளுமை முகமை (TNeGA) மூலம் நில ஆவணங்களை வங்கி அதிகாரிகள் சரிபார்த்து, கடன் வழங்குவார்கள். எனவே, தற்போது தர்மபுரியில் இந்தத் திட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.