துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர்: #MSDhoni-யின் 20 வருட சாதனையை சமன் செய்தார் துருவ் ஜுரல்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சாதனையை துருவ் ஜுரல் சமன் செய்தார்.
துலீப் கோப்பை தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ அணி, அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணியை நேற்று எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா பி 321 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பின்னர் களமிறங்கிய இந்தியா பி அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 184 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதனையடுத்து 275 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா ஏ அணி 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் கில் தலைமையிலான இந்தியா ஏ அணியை வீழ்த்தி இந்தியா பி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், இந்தியா ஏ அணியின் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல், முதல் இன்னிங்ஸில் ஒரு கேட்சும், இரண்டாது இன்னிங்ஸில் 7 கேட்சுகளும் பிடித்து சிறப்பாக பீல்டிங் செய்தார். இதன்மூலம் துலிப் கோப்பை தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்ச்கள் (7 கேட்ச்) பிடித்த விக்கெட் கீப்பர் என்ற எம்.எஸ்.தோனியின் சாதனையை துருவ் ஜுரல் சமன் செய்தார். கடந்த 2004-05 துலிப் தொடரில், கிழக்கு மண்டலத்துக்காக விளையாடி, எம்.எஸ்.தோனி படைத்த சாதனையை 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜுரல் சமன் செய்துள்ளார்.