திருச்செந்தூரில் இருந்து சொந்த ஊர் செல்ல முடியாமல் 2 நாட்களாக தவிக்கும் பக்தர்கள்...
தொடர் கனமழை காரணமாக திருச்செந்தூர் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் 2 நாட்களாக தவித்து வருகின்றனர்.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதையுஙம் படியுங்கள்: கொட்டி தீர்த்த அதிகனமழை | 2 ஆக பிளந்த நெல்லை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை!
இதனால் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்கள் பலர் வெள்ள நீரில் சிக்கி தவிக்கின்றனர். மீட்பு குழுக்கள் அனைவரையும் மீட்டு வருகிறது. பல மக்கள் தங்களை மீட்க கோரிக்கையும் விடுத்து வருகின்றனர். இதன் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பெங்களூர், திருச்சி , திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் 2 நாட்களாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளிலும் அமர்ந்து காத்திருந்து வருகின்றனர். வயதானவர்கள் , பெண்கள் பலர் குழந்தைகளுடன் காத்திருந்து வருகின்றனர். சொந்த ஊர் செல்ல அரசு பேருந்து சேவை ஏற்படுத்தி தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.