புதுச்சேரி - நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணை ஊற்றி தீ குளிக்க முயற்சி !
புதுச்சேரியில் குடும்ப பிரச்னை காரணமாக பெண் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதி, பண்டசோழ நல்லூரை சேர்ந்தவர்கள் எட்டியன், ஜெயந்தி. இவர்களுக்கு 17 வயதே ஆன ஒரு மகள் உள்ளார். அவர் புதுச்சேரி அடுத்து உள்ள தமிழக பகுதியான மருதூரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக ஜெயந்தி நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் புதுச்சேரி போலீசார் மணிகண்டன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கானது புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், மணிகண்டன் இந்த வழக்கில் சரியாக ஆஜராகாத காரணத்தினால் அவர் மீது பிடி வாரண்ட் பிறபிக்கப்பட்டு போலீசார் அவரை மீண்டும் கைது செய்து 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து பிணையில் வெளியே வந்த மணிகண்டன் ஜெயந்தியையும் அவரது மகளையும் நீங்கள் கொடுத்த வழக்கால் தான் நான் சிறைக்கு அடிக்கடி சென்று வருகிறேன் என கூறி தகராறு செய்துள்ளார்.
இதனால், ஜெயந்தி விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலையத்திற்க்கு சென்று புகார் அளித்துள்ளார். அப்போது அங்கிருந்த போலீசார், உங்க குடும்ப பிரச்சினைகளை நீங்க பேசி தீர்த்து கொள்ளுங்க, வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நாங்கள் இதில் எதுவும் செய்ய முடியாது என கூறியுள்ளனர்.
இதில், விரக்தி அடைந்த ஜெயந்தி புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்க்கு சென்று மண்ணெண்ணெயை குடித்துவிட்டு , தன்மேலயும் ஊற்றி கொண்டு தீ குளிக்க முயன்றுள்ளார். அவ்வப்போது அங்கிருந்த வழக்கறிஞர்களும், காவலர்களும் ஜெயந்தியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இது தொடர்பாக புதுச்சேரி போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் பெண் நீதிமன்ற வளாகத்தில் தீ குளிக்க முயன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.